

ஓசூர்: ஓசூர் அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிய விபத்தில் கனடாவில் இருந்து தலை தீபாவளி கொண்டாட வந்தவர் உள்ளிட்ட 4 நண்பர்கள் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோபசந்திரம் அருகே நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற சரக்கு வாகனம், 2 லாரிகள், கார் என 4 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.
இதனால், இச்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு நின்ற காரின் பின்னால், வேகமாக வந்த லாரி மோதியது. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியதில், காரில் இருந்த 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அட்கோ போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஈரோட்டை சேர்ந்த மதன்குமார் (27), சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த முகிலன் (30), கன்னங்குறிச்சியைச் சேர்ந்த கோகுல் (27), காமலாபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (27) என்பதும், நண்பர்களான இவர்களில் மதன்குமார் கனடாவில் பணிபுரிந்து வருவதும், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு திருமணமானதும் தெரிந்தது.
மேலும், தலை தீபாவளி கொண்டாட மதன்குமாரின் மனைவி ஏற்கெனவே கடந்த மாதம் ஈரோட்டுக்கு வந்த நிலையில், கனடாவில் இருந்து மதன்குமார் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். அவரை அவரது நண்பர்கள் காரில் அழைத்து வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கர்நாடக மாநிலம் சித்திர துர்காவை சேர்ந்த லாரி ஓட்டுநர் கிரிஷ் (30) என்பவரை கைது செய்தனர்.