

சென்னை: சூளைமேடு பெரியார் பாதை பகுதியில் வாடகை வீட்டில், 2-வது தளத்தில் வசிப்பர் ரமேஷ் (41). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 30-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். பின்னர், கடந்த 7-ம் தேதி வீடு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்படவில்லை.
ஆனால், உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்க வளையல், கம்மல் மற்றும் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், திருட்டில் ஈடுபட்டது வீட்டின் உரிமையாளரின் மகனான அருண்குமார் (28) என்பது தெரிந்தது. வாடகைதாரர் ரமேஷ் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்டு ஜன்னல் வழியாக நுழைந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அருண்குமாரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.