

சென்னை: இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் கஞ்சா போதை விருந்தில் பங்கேற்ற சினிமா இசையமைப்பாளர் மகள் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம், ஈ.வே.ரா. சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் `கஞ்சா' போதை விருந்து நடப்பதாக கீழ்ப்பாக்கம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு சென்று கண்காணித்தபோது, ஓட்டல் அறையில் கஞ்சா புகைத்தவாறு இளைஞர்களும், இளம் பெண்களும் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, அங்கு இருந்த சென்னை மண்ணடி முகமது இர்பான் (30), அபிலாஷ் (27), மப்பா (32), அப்துல் ஹக் (34), பெருங்களத்தூர் சக்திவேல் (36), புளியந்தோப்பு ஜனார்த் (26), நம்மாழ்வார்பேட்டை கணேஷ் (32), ஏழுகிணறு இப்ராகிம் (30), பெரியமேடு முகமது சாலிக் (25), கிண்டி ஆகாஷ் (27), மந்தைவெளி தசரதராஜ் (24), சிங்கப்பூர் மகமதுபர்கான் (27), புரசைவாக்கம் வினோதன் (30), கொண்டித்தோப்பு துளசிராமன் (23), விருகம்பாக்கம் துர்கா பவானி (23), சூளைமேடு ப்ரவல்லிகா (23), திருவான்மியூர் ரெஜினா (21) மற்றும் ஓட்டல் மேலாளர் சைதாப்பேட்டை சுகுமார் (43) ஆகிய 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து கஞ்சா, 18 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அனைவரும் வாட்ஸ்-அப் குழு அமைத்து ஒருங்கிணைத்து மாதம் 2 முறை போதை விருந்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் மகள் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.