

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதியின் இந்த கருத்துக்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர் சமூக ஊடகங்களில் மோசமாக விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக, சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இச்செயலில் ஈடுபட்டது புதுக்கோட்டையை சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் (25), கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த தவெக உறுப்பினர் டேவிட் (25), சென்னை அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சசிகுமார் (48), தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோனி சகாய மைக்கேல் ராஜ் (37) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், இதே விவகாரத்தில் நீதிபதி குறித்து விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக காவல்துறையின் கைரேகை பிரிவு உதவி ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, கோடம்பாக்கத்தில் வசிக்கும் வரதராஜ் என்பவரை, சென்னை சைபர் க்ரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர் நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.