

சென்னை: பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய காமெடி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த மாணவியை சினிமா துறையைச் சேர்ந்த பலருடன் அனுப்பிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சில தனியார் தங்கும் விடுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கோயம்பேடு, 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவரை மீட்டனர்.
அந்த சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியதாக ஆந்திர மாநில துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் குமார் உள்ளிட்ட 6 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மாணவியின் தந்தை திடீரென இறந்துபோனதால் அவரது தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்.
இதனால் ஆதரவின்றி தவித்த மாணவி, தாயின் தோழியான கிளப் டான்சர் பூங்கொடி என்பவரது வீட்டில் தங்கிப் படித்துள்ளார். ஆதரவற்ற நிலையில் இருந்த மாணவியிடம் பூங்கொடி பணம், நகை, ஆடம்பர வாழ்க்கை என ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
பூங்கொடிக்கு வசதி படைத்த வாடிக்கையாளர்களை ஏற்பாடு செய்து கொடுத்தது சினிமா பட உதவி இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி கண்ணன் (63) என்பது தெரிந்தது. அவரிடம் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்தபோது, அவர் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட பலருக்கு மாணவியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது தெரியவந்தது.
மேலும், அவரது நண்பர் திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரமேஷ் (40) என்பவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த அவரையும் போலீஸார் கைது செய்தனர்.