

சென்னை: கஞ்சா வழக்கில் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தல், பதுக்கல்,விற்பனையைத் தடுக்கும் வகையில் திருமங்கலம் போலீஸார் பாடி குப்பம் சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்தப் பகுதியில் கார் ஒன்றின் அருகே 3 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்களது காரை போலீஸார் சோதனை செய்யத் தொடங்கியவுடன், 3 பேரில் ஒருவர் ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து, மற்ற இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்டது பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமின் மகன் அப்துல் ரகுமான்(21) மற்றும் அவரது கார் ஓட்டுநர் ரசீத்(25) என்பது தெரிந்தது. காரை சோதனை செய்தபோது, 7 கிராம் கொக்கைன், 20 கிராம் கஞ்சா, கூலிப் பாக்கெட்டுகள் இருந்தன.
அவற்றையும் அவர்கள் பயன்படுத்திய 4 செல்போன்கள், கஞ்சா அரவை இயந்திரம், கையடக்க எடைக் கருவி ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான அவர்களது கூட்டாளியைத் தேடி வருகின்றனர். இவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.