

சென்னை: டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மது பிரியர்களை குறிவைத்து தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை முகலிவாக்கம், கிருஷ்ணவேணி நகரைச் சேர்ந்தவர் ஐ.டி ஊழியர் ஜீவா (48). இவர் கடந்த 1-ம் தேதி மாலை, அண்ணாசாலை, ஜி.பி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிசலில் மது வாங்கிவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, அவரது சட்டைப் பையில் வைத்திருந்த ஐ-போன் திருடு போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஜீவா, இது தொடர்பாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தண்டையார்பேட்டை, வீரா குட்டி தெருவைச் சேர்ந்த கிரிதரன் (24), அதே பகுதி நாவலர் குடியிருப்பைச் சேர்ந்த சரவணன் (24), அதே பகுதி அன்னை சத்யா நகர் ரஞ்சித் (33), பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியைச் சேர்ந்த வினோத் (27) என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த இந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஐடி ஊழியர் ஜீவா ஐ-போன் உள்பட 10 செல்போன்கள் மீட்கப்பட்டு, குற்றச்செயலுக்கு பயன்படுத்திய ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று நோட்டமிட்டு, கூட்டமாக உள்ள டாஸ்மாக் கடைகளில் நெரிசலை பயன்படுத்தி செல்போன்களை திருடியது தெரியவந்தது.
மேலும், இவர்கள் இதேபோல, அண்ணாசாலை, எழும்பூர், மண்ணடி, வண்ணாரப்பேட்டை உள்பட சென்னையில் பல இடங்களில் கை வரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கைதான கிரிதரன் மீது கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உட்பட 9 குற்ற வழக்குகளும், சரவணன் மீது 3 கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உட்பட 20 குற்ற வழக்குகளும், ரஞ்சித் மீது 3 குற்ற வழக்குகளும், வினோத் மீது சுமார் 7 குற்ற வழக்குகளும் உள்ளது. மேலும், கிரிதரன் மற்றும் சரவணன் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.