சென்னை: கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட யூடியூபர், கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை: கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட யூடியூபர், கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: உயர் ரக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட யூடியூபர், கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க சென்னை போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரத்யேகமாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி, சூளைமேடு போலீஸார் இன்று காலை சூளைமேடு, கமலா நேரு நகர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை சோதித்தபோது அவர்களிடம் உயர்ரக கஞ்சா, கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

அதை பறிமுதல் செய்த போலீஸார் போதைப் பொருள் வைத்திருந்த சூளைமேட்டைச் சேர்ந்த பிரதாப் (27), பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஜனார்த்தனன் (27), கீழ்கட்டளையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் (21), பூந்தமல்லியைச் சேர்ந்த அப்துல் வாசிம் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், ‘பிரதாப் யூடியூப் சேனல் நடத்தி வருவதும், ஜனார்த்தனன் பெங்களூருவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், பூர்ணசந்திரன் கல்லூரியில் பிபிஏ படித்து வருவதும், அப்துல் வாசிம் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக உள்ளதும் தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in