

சென்னை: முதல்வர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோல், ஆளுநர் மாளிகை, விமான நிலையத்துக்கும் மிரட்டல் வந்தது.
நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில், தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் அது வெடித்து சிதறும் எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.
இதேபோல், இன்று அதிகாலை 4.10 மணிக்கு டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மற்றொரு மின்னஞ்சலில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளாக மிரட்டப்பட்டிருந்தது. இதேபோல், ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா வீடு, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, சென்னை விமான நிலையத்துக்கும் அடுத்தடுத்து மிரட்டல் விடுக்கப் பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு, அதே பகுதியில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு மற்றும் சென்னை விமான நிலையம் என மிரட்டலுக்குள்ளான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில், சந்தேகப்படும்படியான எந்தப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் தகவல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. சென்னையில் கடந்த ஓராண்டாக மின்னஞ்சல் மூலம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வர் வீடு, அமைச்சர்கள் வீடு, ஆளுநர் மாளிகை உள்பட பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இதில், தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆனால், அவர்கள் இதுவரை பிடிபடவில்லை. மிரட்டல்களும் ஓய்ந்தபாடில்லை என்பது கவனிக்கத்தக்கது.