

சென்னை: சென்னையில் அமெரிக்க தூதரகம், பாஜக அலுவலகம் உட்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் அண்மைக் காலமாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், மிரட்டல் கும்பல் வெளிநாட்டிலிருந்து செயல்படுவது தெரியவந்துள்ளது.
அவர்களை சர்வதேச போலீஸார் உதவியுடன் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள 9 வெளிநாட்டு துணை தூதரகங்களுக்கு மர்ம நபர்கள் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதேபோல், பாஜக அலுவலகம், வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோ, நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தகவலறிந்த போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன், மிரட்டலுக்கு உள்ளான 4 இடங்களுக்கும் விரைந்து சென்று சோதனை நடத்தினர். முடிவில் புரளியைக் கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.