

நாகப்பட்டினம் / மேட்டூர்: நாகை அருகே விஜய்யை கண்டித்து போஸ்டர் ஒட்டிய இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக தவெகவினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதேபோல, நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தில் போஸ்டர் ஒட்டிய வேளாங்கண்ணியைச் சேர்ந்த பரத்ராஜிடம்(25) தவெக நிர்வாகிகள் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. பரத்ராஜ் திமுக உறுப்பினர் என்றும், போஸ்டர் ஒட்டும் வேலை செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தவெகவினர் மீது கீழையூர் போலீஸில் பரத்ராஜ் செப்.29-ம் தேதி புகார் அளித்தார். ஆனால், அந்தப் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், செப். 30-ம் தேதி பரத்ராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தவெக கீழையூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் திவாகர் உட்பட அக்கட்சியினர் 4 பேர் மீது பரத்ராஜை தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
திமுக நிர்வாகியிடம் வாக்குவாதம்: சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பொட்டனேரி நான்கு ரோடு பகுதியில் இதேபோன்ற போஸ்டர் ஒட்டப்பட்டபோது, தவெகவினர் திரண்டு சுவரொட்டி ஒட்டக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த திமுக ஒன்றிய துணைச் செயலாளர் முருகனிடம், தவெக மேற்கு ஒன்றியத் தலைவர் மகேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த மேச்சேரி போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இதனிடையே, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக ஓமலூர் காமலாபுரம் கிராமத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.