

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி லாயர்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் அஜீஸ் (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் (23). இவர் அஜீஸின் உறவினர். இவர்களது நண்பர்கள் சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் ரிஷி (25), தீபக் (25) மற்றும் ஆவடியைச் சேர்ந்த மோகன் (25). 5 பேரும் தனியார் வங்கியில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக 5 பேரும் சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா செல்ல இன்று (அக்.2) அதிகாலை காரில் புறப்பட்டுள்ளனர். காரை அஜீஸ் ஓட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர தடுப்பு மீது பாய்ந்து முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.
இதில் அஜீஸின் உறவினர் சம்சுதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், விபத்தில் உயிர் தப்பிய அஜீஸ் காரில் இருந்து வெளியேறி நண்பர்களை மீட்க முயன்றுள்ளார். அப்போது பொதுமக்கள் உதவியுடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்த தீபக் மீட்கப்பட்டுள்ளார். அதற்குள் விபத்தின்போது வாகனத்தில் பற்றிய தீ கார் முழுவதும் பரவியுள்ளது. இதனால் ரிஷி மற்றும் மோகன் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், காரும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தீபக் மற்றும் அஜீஸ் ஆகியோரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 45 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.