

சமாதானத்துக்கு அழைத்து பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதிமுக நிர்வாகி உட்பட 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுவை நெல்லித்தோப்பு குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (27). முன்னாள் பாஜக இளைஞரணி தொகுதி தலைவரான விக்கி, ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், திருவள்ளுவர் சாலையில் 3 நண்பர்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
நவீனா கார்டன் அருகே வந்தபோது, பின்தொடர்ந்து பைக், ஆட்டோவில் வந்த 6-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், விக்கியை வழிமறித்து வெட்டினர். இதில், விக்கியின் நண்பர்கள் 2 பேர் வெட்டு காயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினர். விக்கி இறந்ததை உறுதி செய்தபின் அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் போலீஸார் அங்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். விக்கி ஆதரவாளர்கள், அங்கு குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
விக்கிக்கு நித்யா என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. போலீஸார் நடத்திய விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக பூக்கடை வியாபாரி ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துள்ளார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது விக்கி மற்றும் காமராஜர் நகர் தொகுதி அதிமுக பிரமுகர் பிரசாத் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சமாதானம் பேசுவதாக கூறி விக்கியை, நவீனா திருமண மண்டபம் பகுதிக்கு பிரசாத் அழைத்துள்ளார்.
இதற்காக அங்கு வந்த விக்கியை, தனது கூட்டாளிகளோடு சேர்ந்து பிரசாத் வெட்டி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதிமுக பிரமுகர் பிரசாத் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர்.