எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து: 9 பேர் உயிரிழப்பு

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து: 9 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்து, வட மாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் 2x660 MW மெகா வாட் திறனுடைய எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. பாரதமிகு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் இந்தக் கட்டுமான பணியில் 3,000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தற்போது, சுமார் 70 சதவீத பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்டுமான பணியில், அனல் மின் நிலைய முகப்பு பகுதி அமைக்கும் பணியில் இன்று மாலை சுமார் 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, திடீரென இரும்பு கம்பிகளால் ஆன முகப்பு பகுதியில் உள்ள சாரம் சரிந்து விழுந்தது. இதில், படுகாயமடைந்த பலரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், சிலர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், ஆவடி காவல் ஆணையரக அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சம்பவ இடம் விரைந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அத்துடன், விபத்து குறித்து தீவிர ஆய்வு செய்தனர். விபத்து குறித்து தகவலறிந்த தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து, வடமாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை பார்வையிட்டார். விபத்து குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார்.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், “எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்டுமான பணியில், சுமார் 45 அடி உயரத்தில் அனல் மின் நிலைய முகப்பு பகுதி அமைக்கும் பணியில், வடமாநில தொழிலாளர்கள், போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் ஈடுபட்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in