தி.மலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் கைது

(இடதுபுற படம்) - சுந்தர் | (அடுத்தப்படம் ) சுரேஷ் ராஜ் : கைது செய்யப்பட்ட காவலர்கள்
(இடதுபுற படம்) - சுந்தர் | (அடுத்தப்படம் ) சுரேஷ் ராஜ் : கைது செய்யப்பட்ட காவலர்கள்
Updated on
2 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று இரவு (செப்.29) திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அப்போது வாகனத்தின் ஓட்டுநர் திருவண்ணாமலைக்கு செல்வதால் தனது அக்கா மற்றும் (அக்கா மகள்) 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோயிலுக்கு செல்ல உடன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

திருவண்ணாமலைக்கு வந்ததும், வாழை மண்டிக்கு செல்வதற்காக புறவழிச்சாலை வழியாக வந்து, வேட்டவலம் ரோடு வழியாக நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஏந்தல் புறவழிச்சாலை அருகே இரவு சுமார் 2 மணி அளவில் வந்துள்ளனர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது வாகனத்தில் டிரைவர் உடன் இரண்டு பெண்கள் இருந்தால் உங்கள் மீது சந்தேகம் உள்ளது என கூறி அவர்களை கீழே இறங்கக்கூறி விசாரித்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் வாழைத் தார் ஏற்றி வந்ததாகவும், தன்னுடன் எனது உறவினர் கோயிலுக்கு செல்ல வந்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார். பின்னர், போலீஸார் வாகனத்தை நீங்கள் எடுத்துச் சென்று வாழைத் தார்களை இறக்கிவிட்டு வாருங்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது.

அதனை ஏற்க மறுத்த ஓட்டுநர் இருவரையும் வண்டியில் ஏற்றிச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் போலீஸார் ஓட்டுநரை மிரட்டி இளம் பெண் மற்றும் அவரது தாயை தங்களது இரண்டு பைக்கில் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இளம் பெண்ணை தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் போலீஸார் இருவரும் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவ்வழியாகச் சென்றவர்கள் 2 பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்துள்னனர். பின்னர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்த தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீஸார் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in