

சென்னை: செம்பியம் போக்குவரத்து போலீஸார், மாதவரம் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரித்தனர்.
இதில், காரை ஓட்டி வந்தது தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வரும் கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்த கரம்சந்த் காமராஜ் (50) என்பது தெரிந்தது. மேலும், அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததாக கூறி காரை பறிமுதல் செய்ய போலீஸார் முற்பட்டனர்.
அப்போது, காமராஜ் மது அருந்த வில்லை என்று கூறியதால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில், கீழே விழுந்த கரம்சந்த் காமராஜ் சுயநினைவில்லாமல் இருந்ததால், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அவர்கள் வந்து காமராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த மகன் குரு சரண்ராஜ், தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இறந்திருப்பதை உறுதி செய்தார்.
இதையடுத்து, குரு சரண்ராஜ் போலீஸார் தள்ளி விட்டதாலேயே தந்தை இறந்ததாகவும், போக்குவரத்து எஸ்ஐ வினோத் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செம்பியம் போலீஸில் புகார் அளித்தார். ஆனால், உயிரிழந்த கரம்சந்த் காமராஜ் 4 ஆண்டுகளாக இதய பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், நாங்கள் தள்ளி விடவில்லை. அவராகவே தடுமாறி விழுந்தார் என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, செம்பியம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.