

சென்னை: மது போதையில் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார் (42). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் மேற்கு வங்கத்தைச்சேர்ந்த பிங்கி (36) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி சென்னை சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகலாத், மனைவி பிங்கியுடன்மது அருந்தியதாக கூறப்படுகிறது.
மது போதையில், மனைவியின் நடத்தை தொடர்பான பேச்சு எழுந்து கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த பிரகலாத் மனைவி பிங்கியின் கழுத்தை நெரித்து, கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் மிகுந்த கோபம் அடைந்த பிங்கி,கணவரை கீழே தள்ளி அருகிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து கணவர் கழுத்தில் குத்தினார்.
இதில் பிரகலாத் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் பிரகலாத்தை மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் கத்திக்குத்துக்கு கட்டுப் போடாமல் மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த பிரகலாத் மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அப்போது கழுத்திலிருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், மனைவி பிங்கி 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டுள்ளார். மருத்துவப் பணியாளர்கள் விரைந்து வந்து சோதித்தபோது பிரகலாத் ஏற்கெனவே இறந்திருந்தது தெரிந்தது.