

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலைதள கணக்காளர்கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான காணொலிகள் பரவி வருகின்றன. இதில் போலியான, ஜோடிக்கப்பட்ட காணொலிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கரூரில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து யாரும் எவ்வித வதந்தியையும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.
இதுதொடர்பாக பெறப்பட்ட புகார்களின்பேரில், பொது வெளியில் வதந்தி பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் செய்திகளை பதிவு செய்த வலைதள கணக்காளர்கள் 25 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். மீறி செயல்படுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, கரூர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (38), தவெக மாங்காடு உறுப்பினர் சிவனேசன் (36), அதே கட்சியின் ஆவடி வட்டச் செயலாளர் சரத்குமார் (32) ஆகிய 3 பேரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், வதந்தி பரப்பியவர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.