

விருதுநகர்: திருச்சுழி அருகே ஆற்றில் மணல் திருடியது தொடர்பாக பொக்லைன் இயந்திரத்தை இயக்கிய 15 வயது சிறுவன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி - கமுதி சாலையில் உள்ள பூமாலைப்பட்டி பகுதியில் குண்டாற்றில் சிலர் மணல் திருடுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சுழி வட்டாட்சியர் கருப்பசாமி தலைமை யிலான வருவாய்த் துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பூமாலைப்பட்டியில் குண்டாற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் மணல் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டது. வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸாரை கண்டதும், மணல் திருட்டில் ஈடுபட்டோர் டிராக்டர், பொக்லைன் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.
பின்னர், மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் வாகனத்தையும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டரையும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து, திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அழகர்சாமி அளித்த புகாரின்பேரில், டிராக்டர் உரிமையாளர் தங்கப்பாண்டி, ஓட்டுநர் ராமகிருஷ்ணன் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிய 15 வயது சிறுவன் மீது திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் தேடி வருகின்றனர்.