

சென்னை: இந்தியா முழுவதும் அண்மை காலமாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளிகள், வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள், முதல்வர் வீடு, அமைச்சர்கள் வீடு, கட்சி அலுவலகம், டிஜிபி அலுவலகம், நீதிமன்றம், பல்கலைக் கழகங்களுக்கும் புரளியை கிளப்பும் வகையில் மிரட்டல்கள் விடுக்கப் படுகிறது.
போலீஸாரின் விசாரணையில், இந்த கும்பல் வெளிநாட்டில் இருந்து செயல்படுவது தெரியவந்துள்ளது. அவர்களை சர்வதேச போலீஸார் உதவியுடன் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய இடங்களை குறிவைத்து... இந்நிலையில், இரு தினங்களாக தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை நிர்வாக அலுவலகம், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம், புரசைவாக்கத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டையில் உள்ள தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம், பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய கணக்காளர் அலுவலகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறிவைத்து தொடர்ந்து மிரட்டல்கள் வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள், விடுதலைப்புலிகள் 4 குழுக்களாக சென்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெருநகர சிவில் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள், சம்பவ இடம் விரைந்து 2 மணி நேரம் சோதனை நடத்தியதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த கும்பலை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.