

கொடைக்கானலில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் அந்தரத்தில் தொங்கியது. அதிர்ஷ்டவசமாக, சுற்றுலாப் பயணிகள் உயிர் தப்பினர்.
நாகர்கோவிலில் இருந்து காரில் 5 பேர் நேற்று கொடைக்கானலைக்கு சுற்றுலா வந்தனர். கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டதில், கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் மலைப் பாதை தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு, காரின் முன்சக்கர பகுதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த நிலையில் அந்தரத்தில் தொங்கிய வாறு நின்றது. அதிர்ஷ்டவசமாக காரின் பின்பக்க சக்கரங்கள் சாலையில் இருந்ததால், அப்பகுதி மக்கள் உதவியுடன் பயணிகள் சிறு காயங்களுடன் சாதுர்யமாக காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினர்.
பின்னர், சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸார் விசாரிக்கின்றனர்.