

ஓசூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மேலும் 3 மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
ஓசூரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் காப்பகத்தில் 33 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அங்கு தங்கி படித்து வந்த 9 வயது மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, அம்மாணவி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காப்பக காப்பாளர் ஷாம் கணேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், இக்குற்றத்தை மறைக்க கட்டப்பஞ்சாயத்து செய்த ஷாம் கணேஷின் மனைவி ஜோஸ்பின் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, இக்காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, அங்கு தங்கியிருந்த மாணவ, மாணவிகள் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். மேலும், வேறு மாணவிகள் யாரும் பாலியல் தொல்லையால் பாதிக்கப் பட்டுள்ளார்களா என போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர். இதில், 3 மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேல் விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.