

மதுரை: மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கில், காவல் ஆய்வாளர், காவலர்கள் 4 பேருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவர் மூத்த மகன் முத்து கார்த்திக் (17). இவரை கடந்த 2019 ம் ஆண்டு குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர் முத்துகார்த்திக்கை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையாடுத்து சிபிசிஐடி போலீஸார் மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜோசப்ஜாய் இன்று உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் தடயங்களை அழிக்க முயன்ற காவல் ஆய்வாளர் அருணாசலம், சார்பு ஆய்வாளர் கள் பிரேமசந்திரன், கண்ணன் (ஓய்வு) மற்றும் தண்டனை பெற்ற 4 பேர் மீதும் தனி வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை காவல் ஆய்வாளர் அருணாசலத்தை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் உடற்கூராய்வின் போது காயங்களை மறைத்து அறிக்கை அளித்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் ஜெயக்குமார் மற்றும் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீலதா மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.