கோவை காப்பகத்தில் சிறுவனை பெல்ட்டால் தாக்கிய நிர்வாகி கைது!

கோவை காப்பகத்தில் சிறுவனை பெல்ட்டால் தாக்கிய நிர்வாகி கைது!
Updated on
1 min read

கோவையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவனை பெல்ட்டால் தாக்கிய காப்பக பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகேயுள்ள கோட்டைபாளையம் சக்தி நகரில் ‘கிரேஸ் ஹேப்பி ஹோம்’ என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு பெற்றோர் இல்லாத 26 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தில் உள்ள ஒரு சிறுவனை, காப்பக நிர்வாகி பெல்ட்டால் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று பரவியது.

அந்த வீடியோவில்,காப்பகத்தில் உள்ள அறையில், சிறுவர்கள் அமர்ந்து படித்துக் கொண்டு இருக்கின்றனர். அப்போது காப்பக நிர்வாகி ஒருவர் படித்துக் கொண்டிருந்த சிறுவனை எழுந்திருக்கச் செய்து அவரது முதுகில் பெல்ட்டால் சரமாரியாக அடித்தார். அந்த சிறுவன் வலியால் துடித்துக் கொண்டு, மீண்டும் சென்று அமர்ந்த போதும், காப்பக நிர்வாகி அச்சிறுவனை தாக்குவது பதிவாகியுள்ளது.

சிறுவனை தாக்கிய காப்பக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும், இச்சம்பவத்தை கேள்விப்பட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பரிமளா காந்தி விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் கடந்த மாதம் 4-ம் தேதி நடந்துள்ளது. 8 வயதுடைய இரு சிறுவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு, ஒரு சிறுவன் மற்றொருவரை கீழே தள்ளியுள்ளார். இதை கண்டிப்பதற்காக காப்பகத்தின் பொறுப்பாளரான செல்வராஜ்(58), தள்ளிவிட்ட சிறுவனை பெல்ட்டால் தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் செல்வராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in