

காரைக்கால்: இலங்கைக்கு கடத்துவதற்காக காரைக்காலில் 275 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தவரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். காரைக்காலில் கடந்த ஜூலை 16-ம் தேதி போலீஸார் நடத்திய வாகன சோதனையின் போது, ஒரு காரில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அதில் பயணித்த திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்த திலீப்(38), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரவேல்(44) ஆகி யோரை கைது செய்தனர்.
மேலும், காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடியில் குமரவேல் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்பிலான 275 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா வரவழைத்த ஆம்பூரைச் சேர்ந்த கிஷோர் குமார்(37) மற்றும் கஞ்சாவை கடத்திச் செல்வதற்காக காரைக்கால் கடற்கரை பகுதிக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 2 பேர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலை முதல் சோதனை: இதுதொடர்பாக புதுச்சேரி போலீஸார் மற்றும் மத்திய விசாரணை அமைப்பினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து உதவி இயக்குநர் தலைமையிலான 4 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை காரைக்காலுக்கு வந்து, கீழகாசாக்குடியில் குமரவேல் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ளவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியதை காரைக்கால் போலீஸார் உறுதிசெய்த நிலையில், சோதனை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.