

சென்னை: திரிபுராவிலிருந்து ஹெராயின் கடத்தி வந்து, சென்னையில் சினிமா துறையினர், ஐடி இளைஞர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று தரமணி, தபால் நிலையம் எதிரில் கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது ஹெராயின் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார் போதைப்பொருள் வைத்திருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஷாகிம் மியா (21), அதே மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் மிர்தா (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் ஹெராயினை திரிபுரா மாநிலத்திலிருந்து வாங்கிவந்து சென்னையில் சினிமா துறையினர், ஐடி ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர். மேலும், ஷாகிம் மியா சென்னையில் தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகவும், ஆசிப் மிர்தா, துப்புறவு பணியாளராக வேலை செய்து வந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.