

சென்னை: தனியார் நிறுவன அதிகாரியின் 162 பவுன் தங்க நகைகளை நூதன முறையில் அடமானம் வைத்து ரூ.90 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை, விஜிபி சாலை பகுதியில் வசிப்பவர் சுலைமான் (32). தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். இவர், கிண்டி, லாயர் ஜெகநாதன் தெருவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், எடுத்தும் வந்ததால் வங்கி மேலாளர் சாமிநாதனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் நீங்கள் பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு நேரில் வர வேண்டாம். நானே ஊழியரை அனுப்புகிறேன் என்று தெரிவித்ததால் சுலைமான் பணம் எடுக்க தேவைப்படும்போது, மேலாளர் சாமிநாதனை தொடர்பு கொண்டவுடன் அவர் ஊழியர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பி, படிவங்களை பூர்த்தி செய்து பணம் கொடுத்து விடுவார்.
இது போல கடந்த ஜூலை 2-ம் தேதி சுலைமான், மேலாளர் சாமிநாதனை தொடர்பு கொண்டு அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைக்க வேண்டும் என கேட்டபோது, சாமிநாதன், பிரசாத் என்ற வங்கி காசாளரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, சுலைமான், தன்னிடமிருந்த 162 பவுன் தங்க நகைகளை கொடுத்து, படிவங்களில் கையெழுத்திட்டு கொடுத்தார்.
பின்னர் மேலாளர் சாமிநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு, அடமானம் வைத்த நகைக்கான பணத்தை கேட்டபோது, சர்வர் வேலை செய்யவில்லை, ஆடிட்டிங் நடைபெறுகிறது என காலம் தாழ்த்தி உள்ளார். சந்தேகம் அடைந்த சுலைமான் 15-ம் தேதி வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தபோது, மேலாளர் சாமிநாதன் வங்கியில் பலரிடம் இதே பாணியில் பண மோசடியில் ஈடுபட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த சுலைமான் இந்த விவகாரம் தொர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் காசாளர் புழுதிவாக்கம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பிரசாத் (25) மற்றும் அவ்வங்கியின் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து, மேலாளர் சாமிநாதன் கொடுக்கும் தங்க நகைகளை உபயோகத்தில் இல்லாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் அடமானம் வைத்து, போலி கையெழுத்துக்கள் இட்டு பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதேபோல், சுலைமானின் 162 பவுன் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.90 லட்சம் பெற்று தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட காசாளர் பிரசாத், வங்கி இயக்க மேலாளரான கே.கே.நகரைச் சேர்ந்த திவாகர் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மேலாளர் ஜெகநாதன் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவருகின்றனர்.