

சென்னை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீடு உட்பட சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பெயரில் நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்தது.
அந்த மின்னஞ்சலில், சென்னை வர்த்தக மையத்திலும், தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், சென்னை கோட்டையில் உள்ள கடற்படை கேண்டீன், புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸார் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீடு உட்பட மிரட்டல் விடுக்கப்பட்ட 5 இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று சோதனை நடத்தினர். ஆனால், சந்தேகப்படும்படியாக எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, புரளியை கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த மிரட்டல் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.