

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (24). எலெக்ட்ரீஷியனான இவர், திருச்செந்தூரை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு மாயமாகினர்.
தனது மகளைக் காணவில்லை என பெண்ணின் தந்தை திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து போலீஸார் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மணிகண்டனுக்கும், அந்த பெண்ணின் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.
இந்நிலையில், மணிகண்டன் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் தந்தை, தம்பி உள்ளிட்ட 5 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பெண்ணின் தந்தை நட்டார் (48) மற்றும் தம்பி உள்ளிட்ட 3 சிறுவர்கள் என 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.