

சென்னை: குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக, நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக தாய், மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள ஆயுதப்படை பிரிவு முதல்நிலை காவலராக பணிபுரிபவர் அந்தோணி ஜார்ஜ் பிரபு (37). இவர், 2021-ம் ஆண்டு முதல் நடிகர் சூர்யாவுக்கு தனி பாதுகாவலராக உள்ளார். அப்போது, சூர்யா வீட்டில் வேலை செய்து வரும் சுலோச்சனா (47) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், சுலோச்சனா தனது மகன் பாலாஜி (25) தங்க நாணய திட்டம் நடத்தி வருவதாகவும், அத்திட்டத்தில் சேர்ந்தால் குறைந்த விலையில் தங்க நாணயம் வாங்கி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பி, கடந்த ஜனவரி 23-ம் தேதி ரூ.1.92 லட்சத்தை பாலாஜியின் வங்கி கணக்குக்கு செலுத்தி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, தந்தையின் புற்றுநோய் செலவிற்காக வாங்கிய தனிநபர் கடன் மற்றும் தந்தையின் மருத்துவ செலவிற்காக உறவினர்கள் வழங்கிய தொகை என மொத்தம் ரூ.46.87 லட்சத்தை கடந்த மார்ச் 4-ம் தேதி காவலர் பிரபு வழங்கி உள்ளார். பாலாஜி கணக்கில் மொத்தம் ரூ.50.37 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், உறுதி அளித்தபடி பாலாஜி தங்க நாணயங்கள் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். தொடர்ந்து கொடுத்த நெருக்கடியைச் தொடர்ந்து ரூ.7.91 லட்சம் மட்டும் பிரபுவுக்கு திரும்ப கொடுக்கப்பட்டது. மீதம் உள்ள சுமார் ரூ.42 லட்சம் கொடுக்கப்படவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பிரபு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து பாலாஜி, அவரது தாய் சுலோச்சனா, கூட்டாளிகள் பாஸ்கர் (23), விஜயலட்சுமி (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.