எட்டயபுரம் அருகே கார் மோதி இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல் போராட்டம்

எட்டயபுரம் அருகே கார் மோதி இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல் போராட்டம்
Updated on
1 min read

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். விபத்து ஏற்பட்ட பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டம் களக்குடியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சந்தனமாரி (33). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் எட்டயபுரம் அருகே தெற்கு முத்துலாபுரத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கர்ப்பிணியாக உள்ள மகாலட்சுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நடத்தி, தெற்கு முத்துலாபுரத்துக்கு வந்துள்ளார். இதனால் சந்தனமாரியும் தெற்கு முத்துலாபுரத்தில் தங்கியிருந்து மனைவியை கவனித்து வந்துள்ளார்.

இன்று மாலை டீ குடிப்பதற்காக ஊரில் இருந்து மு.கோட்டூர் விலக்கில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு செல்வதற்காக நான்கு வழிச்சாலையை கடந்து மு.கோட்டூர் விலக்கை நோக்கி சென்றபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், சந்தனமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து டி.எஸ்.பி. (பொறுப்பு) ஜெகநாதன், எட்டயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சந்தனமாரியின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த உறவினர்கள் மற்றும் தெற்கு முத்துலாபுரம் கிராம மக்கள் மு.கோட்டூர் விலக்கில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி திடீரென தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மேம்பாலம் அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் இரு மார்க்கங்களிலும் அணி வகுத்து நின்றன. இதனிடையே, விபத்து குறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கார் ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த சிவக்குமார்(31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in