

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டிலிருந்து கடத்தி வந்தவர், வாங்கி செல்ல காத்திருந்தவர் கைது செய்யப்பட்டனர். வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுங்கத் துறை, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தி வருபவர்களைக் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படவுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ.18 கோடி மதிப்புள்ள 1.80 கிலோ எடையுள்ள மெத்தா குளோன் என்ற சிந்தடிக் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த நபரையும், அதனை வாங்கிச் செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.