

சென்னை: தங்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் நீதிமன்ற சாட்சிகளை மிரட்டுவதால் 5 பேர் சென்னை காவல் எல்லைக்குள் நுழைய சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது. சென்னை காவல் எல்லைக்குள் நுழைந்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், தங்களுக்கு எதிரான குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சாட்சிகளை மிரட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் சென்னைக்குள் நுழைய காவல்துறை தடை விதித்துள்ளது.
அதன்படி, சரித்திர பதிவேடு குற்றவாளிகளான பனையூரை சேர்ந்த அஜய் ரோகன்(36), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த நாகேந்திர சேதுபதி(33), மதுரையை சேர்ந்த பிரேம்குமார்(45), திருவான்மியூரை சேர்ந்த ராஜா(42), செல்வபாரதி(26) ஆகிய 5 பேருக்கு வெளியேறுதல் ஆணையை காவல் ஆணையர் அருண் பிறப்பித்துள்ளார்.
இதன்மூலம் 5 பேரும் நீதிமன்ற வழக்கு, காவல் துறை விசாரணை தவிர்த்து, வேறு எந்த காரணத்துக்காகவும் சென்னை காவல் எல்லைக்குள் நுழைய அடுத்த ஓர் ஆண்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.