

சென்னை: திருமணத்துக்கு நகை வாங்குவதுபோல் நடித்து சென்னையில் 20 நகைக் கடைகளில் மோதிரம் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபலமான நகைக்கடைக்கு கடந்த 2-ம் தேதி மதியம், 2வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் மோதிரம் பிரிவுக்குச் சென்று பல்வேறு மோதிரங்களைப் பார்த்துவிட்டு எதுவும் பிடிக்கவில்லை என்று கூறி வெளியேசென்று விட்டனர்.
பின்னர், கடை ஊழியர்கள் மோதிரங்களைச் சரிபார்த்தபோது, அதில் சுமார் 4 கிராம் எடை கொண்ட ஒரு தங்க மோதிரம் திருடு போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இதுதொடர்பாக கடை உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக நகைக்கடையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், மோதிரம் வாங்குவதுபோல் நடித்து, திருட்டில் ஈடுபட்டது சென்னை செம்பியத்தில் வசிக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ்கான்(47), திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்த முஷீர் அகமது (43) என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடமிருந்து 54 கிராம் எடை கொண்ட 18 தங்க மோதிரங்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸ் விசாரணையில், இருவரும் சேர்ந்து நுங்கம்பாக்கம், தண்டையார் பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், அம்பத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள20 நகைக் கடைகளில், திருமணத்துக்கு மோதிரம் வாங்குவது போல நடித்து, கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி, மோதிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.