

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனது மனைவி, வேறு ஒருவருடன் கூடா நட்பு கொண்டிருந்ததை அறிந்த கணவர், மனைவி மற்றும் ஆண் நண்பரின் தலையை வெட்டிக் கொலை செய்தார். பின்னர், வெட்டப்பட்ட தலைகளைக் கொண்டு சென்று, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மலைகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி (58). இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். கடந்த 20 வருடங்களுக்கு முன் கொளஞ்சி லட்சுமி (40) என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், லட்சுமிக்கும், மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு (62) என்பவருக்கும் இடையே கூடா நட்பு இருந்துள்ளது. இதையறிந்த கொளஞ்சி இருவரையும் எச்சரித்துள்ளார். எனினும், அவர்களது நட்பு தொடர்ந்தது. இந்நிலையில், கொளஞ்சி வீட்டு மொட்டை மாடியில், தங்கராசு, லட்சுமி ஆகியோர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்து கிடந்தனர்.
இருவரின் உடல்கள் மட்டும் அங்கு கிடந்தன. துண்டிக்கப்பட்ட தலைகளைக் காணவில்லை. தகவலறிந்து வந்த வரஞ்சரம் போலீஸார், இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே, லட்சுமியின் கணவர் கொளஞ்சி, இருவரின் தலைகளை சாக்குப் பையில் போட்டு எடுத்துக் கொண்டு, சரணடையும் நோக்கில் வேலூர் மத்திய சிறைக்குச் சென்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேலூர் மத்திய சிறைக் காவலர்கள், அவரை அருகில் உள்ள பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், காவல் நிலையத்தில் சரணடைந்த கொளஞ்சியை வரஞ்சரம் போலீஸார் கைது செய்து, விசாரணைக்காக கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.