

திருப்பூர்: மக்களுக்கு பயன்பாடற்ற இடத்தில் சாலை அமைத்ததை எதிர்த்து புகார் அளித்தவரை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில், திமுக பேரூராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அடுத்த கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (57). இவர் அப்பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு நேற்று முன்தினம் மாலை சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சாமளாபுரம் - காரணம்பேட்டை சாலையில் கருகம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பழனிசாமி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார், நிற்காமல் சென்றுவிட்டது.
தகவலறிந்து வந்த மங்கலம் போலீஸார் பழனிசாமி உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது சாமளாபுரம் பேரூராட்சித் தலைவரான பழனிசாமி (60) என்பதும், அவர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பழனிசாமியை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு: இந்நிலையில், பழனிசாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டினர். தொடர் விசாரணையில், முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றி, பேரூராட்சித் தலைவர் பழனிசாமி கொலை செய்தது கண்டறியப்பட்டது. அவரைக் கைது செய்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “விபத்தில் இறந்த பழனிசாமி, பேரூராட்சி நிர்வாகம் மக்களுக்கு பயன்பாடில்லாத தனியார் இடத்தில் சாலை போட்டது தொடர்பாக, திருப்பூர் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார்.
சுயேச்சையாக போட்டியிட்டு... இதனால் அந்தப் பணி நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திர மடைந்து, புகார் அளித்த பழனிசாமியைக் கொலை செய்துள்ளார் பேரூராட்சித் தலைவர் பழனிசாமி. இவர் ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தாலும், கடந்த முறை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றுள்ளார். பின்னர், திமுகவில் இணைந்து பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியவர்” என்றனர்.