

சென்னை: லாட்ஜில் தங்கியிருந்த காதலர்கள் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சென்னை அண்ணாநகரில் உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் திரிஷா(20). சோழவரம் அருகே உள்ள எடப்பாளையம் அண்ணா தெருவில் வசித்தவர் ராபின்(22). இருவரும் சென்னை அண்ணா நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தனர். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்.8) காலை 11 மணியளவில் வேப்பேரி காவல் நிலையம் பின்புறம், உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராபின் கோபித்துக் கொண்டு வெளியேறி உள்ளார். அறையில் இருந்த திரிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிதுநேரம் கழித்து அறைக்குத் திரும்பிய ராபின், காதலி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து, இதுதொடர்பாக திரிஷாவின் தோழிக்கு தகவல் தெரிவித்து, லாட்ஜ் முகவரியையும் கூறியுள்ளார். மேலும், தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு, போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அறை கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார். உடனடியாக தோழி, திரிஷாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு போன் செய்துள்ளனர்.
லாட்ஜ் ஊழியர்கள் மாற்று சாவிமூலம் கதவை திறந்து பார்த்த போது திரிஷா தூக்கில் தொங்கி யது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து வேப்பேரி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து திரிஷா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராபினிடம் விசாரணை நடத்த முயன்ற போது, அவரும் இரவு 9 மணியளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சோழவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ராபின், திரிஷா காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் 6 மாதங்களுக்கு முன்னரே தெரியவந்துள்ளது. திருமணம் செய்துவைக்க இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளது ஏன் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல... தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்:104, ஐகால் உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.