

கும்பகோணம்: ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் கொலை முயற்சி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கும்பகோணம் அடுத்த ஆடுதுறை பேரூராட்சித் தலைவராக (பாமக) இருப்பவர் ம.க.ஸ்டாலின். இவரை கடந்த 5-ம் தேதி ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது. இது தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடையாளூர் புதுத்தெருவைச் சேர்ந்த லட்சுமணன்(30) என்பவர், கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலுக்கு நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், லட்சுமணனிடம் விசாரணை நடத்துவதற்காக 2 நாட்களுக்கு முன் உடையாளூருக்கு போலீஸார் சென்றபோது, அங்கு லட்சுமணன் இல்லை.
இந்நிலையில், லட்சுமணன் உடையாளூரில் உள்ள வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் அங்கு சென்றனர. அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, லட்சுமணன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ம.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “லட்சுமணன் உயிரிழப்பில் பல சந்தேகங்கள் உள்ளன. போலீஸாரின் கவனத்தை திசை திருப்ப அந்த கும்பல் லட்சுமணனை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது" என்றார்.