

காஞ்சிபுரம்: தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை சரிவர கையாளாத காரணத்தால், டி.எஸ்.பி சங்கர் கணேஷை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற வளாகத்திலேயே சீருடையுடன் கைது செய்யப்பட்டார்.
வாலாஜாபாத் அருகே உள்ள நத்தப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பேக்கரி கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த பூசிவாக்கத்தைச் சேர்ந்த முருகன், தேநீர் குடிக்கும்போது தேநீர் சரி இல்லை என்று கேட்டது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சிவக்குமாரின் மருமகன் லோகேஷ் காவல்துறையில் பணி புரிகிறார். இந்த தகராறை கேள்விப்பட்ட லோகேஷ், சிலருடன் வந்து முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முருகனின் மனைவி பத்மாவதி வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். லோகேஷின் மாமனார் சிவக்குமார் உள்ளிட்டோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையில் பணி செய்யும் லோகேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து முருகன் தரப்பில் தாங்கள் கொடுத்த புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கக் கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த வழக்கில் காவல்துறையைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டுள்ளதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுபோல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கை சரியாக கையாளாத குற்றச்சாட்டில் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்ய நீதிபதி செம்மல் உத்தவிட்டார்.
இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி சங்கர் கணேஷ் சீருடையுடன் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார். அவரை செப்.22-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்கை சரிவர கையாளவில்லை என்பதற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியிலும், காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகத்திடம் கேட்டபோது, “எந்த அடிப்படையில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்றார்.