

சென்னை: இணையத்தில் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வழியாகவும் மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகம், இரட்டிப்பு பணம், டிஜிட்டல் கைது, பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்சி, பங்குச்சந்தை முதலீடு, வாட்ஸ்-அப் ஹேக்கிங் உட்பட பல்வேறு வகையான சைபர் க்ரைம் மோசடிகள் தினம்தோறும் அரங்கேறி வருகின்றன. மேலும், வங்கியிலிருந்து பேசுவதாகவும், போலீஸ் அதிகாரி பேசுவதாகவும் செல்போனில் அழைத்தோ, மிரட்டியோ பணம் பறிப்பு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
மோசடிகளில் ஈடுபடும் நபர் அவரது முகத்தையோ, அடையாளத்தையோ காண்பிப்பது இல்லை. அவரது நம்பிக்கையூட்டும் வார்த்தைகளே அவரது முதலீடு. இதை நம்பியே பலர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இக்கும்பல் தற்போது புதுவகையான மோசடிகளைக் கையிலெடுத்து வருகிறது. அந்த வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
நிறுவனங்கள், கல்வி, நிதி, போக்குவரத்து, விவசாயம், விற்பனை, சந்தைப்படுத்துதல், சைபர் பாதுகாப்பு, சட்டம் உள்பட அனைத்து துறைகளிலும் தற்போது ஏ.ஐ. தொழில் நுட்ப பயன்பாடு உள்ளது. மேலும், நோயைக் கண்டறிதல், மருந்துகளை உருவாக்குதல், தனிநபருக்கான சிகிச்சை முறைகளை வடிவமைத்தல் போன்ற துறைகளிலும், மோசடி கண்டறிதல், முதலீட்டு ஆலோசனை, கடன் தகுதி ஆய்வு, வாடிக்கையாளர் சேவை, விளம்பரம் போன்ற துறைகளிலும் ஏ.ஐ. பயன்படுத்தப்படுகிறது.
இப்படி அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளதால் மோசடி கும்பலும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் கூறியதாவது: ஏ.ஐ. தொழில்நுட்பம் அனைத்து தரப்பினருக்கும் உதவியாக உள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பத்தை பெற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இணையதளங்களில் இலவசமாகவும் கிடைக்கிறது. இதை பயன்படுத்த தொங்கியுள்ள சைபர் க்ரைம் மோசடி கும்பல் இணையதள தேடுதலில் அவர்கள் தொடர்புடைய போலி ஏ.ஐ. தேடுதலை முதலில் வரும்படி வைத்து விடுகின்றனர். அதை அழுத்தி அடுத்தகட்ட நகர்வுக்கு பொதுமக்கள் செல்லும்போது, அவர்கள் நம்முடைய அனைத்து தகவல்களையும் திருடும் வகையில் செட்-அப்பை மாற்றி விடுகின்றனர். மேலும், அவர்களை நோக்கி நம்மை செல்ல வைத்து விடுகின்றனர்.
இதன்மூலம் நமது அனைத்து தகவல்களும் திருடப்படுவதோடு, பணம் மோசடிக்கும் வழிவகுத்து விடுகின்றனர். எனவே, இணையத்தில் ஏ.ஐ. தொடர்பான தேடுதலில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை யாரேனும் பாதிக்கப்பட்டால் ‘1930’ எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றனர். இவ்வாறு கூறினர்.