

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கண்காணிப்பாளர் மற்றும் கோயில் காவலரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அரசனூரைச் சேர்ந்தவர் விவேக் (34). இவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் கோயில் தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் பிரபாகரன் (40), சிறப்பு பணிக்காக திருச்செந்தூர் கோயில் புறக்காவல் நிலையத்தில் இருந்தார். அப்போது, அவர் தனக்கு வேண்டியவர்களை மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வழியில் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு வந்த கோயில் கண்காணிப்பாளர் விவேக், பேரிகார்டை வைத்து தடுப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விவேக் மற்றும் காவலர் பிரபாகரன் ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், காவலர் பிரபாகரன், விவேக்கை தாக்கியுள்ளார். விவேக்கும் பதிலுக்கு தாக்கியுள்ளார்.
பின்னர், கோயில் கண்காணிப்பாளர் விவேக்கை, புறக்காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, காவலர் பிரபாகரன் மற்றும் சிலர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த விவேக் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே காவலர் பிரபாகரனும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக் மற்றும் காவலர் பிரபாகரன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கோயில் காவல் ஆய்வாளர் கனகராஜன் விசாரணை நடத்தி வருகிறார். மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.