

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருடு போன விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) உள்ளது. இதன் நிர்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி உள்ளார். இவர் சென்னை கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் 2-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி அத்யஷா பரிதாவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தம்பதியினர் கடந்த மாதம் 24ம் தேதி குடும்பதுடன் வெளியூர் சென்று விட்டு 28ம் தேதி வீடு திரும்பியுள்ளனர். பின்னர், அத்யஷா வீட்டு பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், அந்தக் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பீரோ உடைக்கப்படவில்லை. மேலும், பீரோவில் ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளது. அதில், ரூ.4.5 லட்சம் மட்டுமே மாயமாகி உள்ளது என கூறப்படுகிறது.
எனவே, வெளியாட்கள் யாரும் திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்த போலீஸார், ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் 4 ஆண்டுகளாக சமையல் வேலை செய்து வரும் பாலன், ஒரு வருடமாக வேலையாளாக பணி செய்து வரும் தேவி, 8 மாதமாக பணி செய்யும் ராஜேஸ்வரி ஆகிய 3 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.