

சென்னை: வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த 2 வட இந்தியர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுற்றுலா விசாவில் எத்தியோப்பியா சென்றுவிட்டு வந்த அவர்கள் வைத்திருந்த வெளிநாட்டு சாக்லெட்கள் அடங்கிய பெட்டிகளை பிரித்து சோதனை செய்தனர். அதில் உயர்ரக கொகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
எனவே இருவரையும் கைது செய்த அதிகாரிகள், சர்வதேச மதிப்பில் ரூ.56 கோடி மதிப்புள்ள 5.618 கிலோ கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பணத்துக்காக போதைப்பொருளை கடத்தி வந்ததாகவும், இதனை வாங்குவதற்காக இருவர் விமான நிலையம் வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் பிடிக்க கண்காணிப்பு கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ஓர் இளைஞர் உள்நாட்டு முனையம் வழியாக விமானத்தில் டெல்லி தப்பிச்சென்றார்.
விமான நிலையத்தில் இருந்த மற்றொருவரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், அவர் மும்பையைச் சேர்ந்தவர் என்பதும், தப்பிச் சென்றவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவர் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து, விமானத்தில் டெல்லி தப்பிச் சென்ற நைஜீரிய இளைஞரை அதிகாரிகள் டெல்லி சென்று கைது செய்தனர். கடந்த மாதம் 23-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் நைஜீரிய பெண் பயணியிடமிருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ.12 கோடி கடத்தல் சிகரெட் அழிப்பு: சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் இ-சிகரெட்கள், சாதாரண சிகரெட், புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகளில் 85 சதவீதம் அளவுக்கு, ‘புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்’ என்ற எச்சரிக்கை விளம்பரங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு இல்லாத சிகரெட் பாக்கெட்டுகள், ‘மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்ற எச்சரிக்கை விளம்பரம் இல்லாத மது பாட்டில்கள் போன்றவற்றை சென்னை சுங்க அதிகாரிகள், பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்கின்றனர்.
மேலும் பொருட்கள் உற்பத்தி, தயாரிப்பு தேதி, இறக்குமதி, ஏற்றுமதி, எப்படி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது போன்ற விவரங்கள் இல்லாத பொருட்கள், பார்சல்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12.5 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தீயில் எரித்து அழிக்கப்பட்டன என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.