தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: நடிகர் கனல் கண்ணன் உள்பட 53 பேர் மீது வழக்கு

கனல் கண்ணன் | கோப்புப் படம்
கனல் கண்ணன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற நடிகர் கனல் கண்ணன் உள்பட 53 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர், கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், பாலவாக்கம் பல்கலை நகர் உள்பட சென்னையில் 4 இடங்களில் கரைக்கப்பட்டன.

அதேபோல், சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 2,054 விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் நேற்று முன்தினம் கரைக்கப்பட்டன. ஏற்கெனவே, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதி வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த சாலை வழியாக தடையை மீறி நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் மணலி மனோகரன், நடிகர் கனல் கண்ணன் உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், நள்ளிரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே, தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 53 பேர் மீது ஜாம்பஜார் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in