

ஆன்லைன் முதலீடு மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி, சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று விடுத்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அண்மைக்காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில், பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொதுமக்களை மோசடி நபர்கள் ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது, சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் பிரிவில் ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அதிகமான புகார்கள் வந்துள்ளன.
இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், சமூக ஊடக விளம்பரங்கள் மூலமாக பொதுமக்களை தொடர்பு கொண்டு, அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி வாட்ஸ்- அப் குழுவில் சேர்த்து, பிறகு போலியான முதலீட்டு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி, பணத்தை செலுத்த தூண்டுகின்றனர்.
மோசடியாளர்கள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு லாபம் வழங்குவது போல், குறைந்த தொகையை எடுக்க அனுமதிக்கின்றனர். இதில் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி பின்னர், அதிக பணம் செலுத்தினால் மட்டுமே அனைத்து முதலீட்டு பணத்தையும் எடுக்க முடியும் என்று வற்புறுக்கின்றனர். இதனால், பொதுமக்களை மேலும் பணத்தை செலுத்த வைக்கின்றனர்.
இதில், பொதுமக்கள், மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பும் வங்கி கணக்குகள் அனைத்தும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடையது இல்லை. மேலும், பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு, செபி விதிமுறைப்படி எந்தவொரு ரசீதோ, ஆவணமோ, ஒப்பந்தமோ தரப்படுவதில்லை. அதோடு, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமோ, செபியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமோ இதுபோன்ற வாட்ஸ்அப் குழுக்கள், அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் தொடர்பு கொள்ளமாட்டார்கள் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, பொதுமக்கள் அதிக லாபம் கொடுப்பதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு விளம்பரங்களை நம்பி அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். பொதுமக்கள், ஏதேனும் பண மோசடியில் சிக்கினால், உடனடியாக சைபர் குற்றப்பிரிவை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது https://cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.