திருவள்ளூர்: கருக்கலைப்பால் 17 வயது சிறுமி உயிரிழப்பு

திருவள்ளூர்: கருக்கலைப்பால் 17 வயது சிறுமி உயிரிழப்பு
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில், சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த, சிறுமிக்கு சகோதரர் உறவு முறை கொண்ட 17 வயது சிறுவனும் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியூர் சென்றுள்ளனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பொதட்டூர் பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என்று புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் போலீஸார், சிறுமியை மீட்ட போது, சிறுவனால் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து, சிறுவனை கைது செய்து, காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர், சிறுமியை ஆந்திர மாநிலம்- நகரி அருகே உள்ள பண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிறுமிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர்.

தொடர்ந்து, சொந்த ஊருக்கு வந்த சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தது தொடர்பாக ஆந்திர மாநிலம், தனியார் மருத்துவமனையின் செவிலியரான, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வைலட் கானிக் (52), திருத்தணியை அடுத்த சிவாடாவை சேர்ந்த அரிபாபு (37) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in