

திருச்சி / சென்னை: துறையூரில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்வதற்கு முன்னதாக, அப்பகுதி வழியாக வந்த ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, அதன் ஓட்டுநர் மற்றும் 8 மாத கர்ப்பிணியான உதவியாளரை தாக்கியதாக அதிமுக நகரச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீஸார் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆக.18-ம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது, 108 ஆம்புலன்ஸ் அவ்வழியாக நோயாளியை ஏற்றுவதற்காக கூட்டத்துக்கு நடுவே வந்தது. அப்போது, கோபமடைந்த பழனிசாமி, வேண்டுமென்றே கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்த ஆம்புலன்ஸ் விடுகின்றனர். ஆம்புலன்ஸில் நோயாளி இல்லையென்றால், ஓட்டுநர் நோயாளியாக செல்வார் என எச்சரித்திருந்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அதிமுக தொண்டருக்கு மயக்கம்: இந்நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அப்பகுதியில் அதிமுகவினர், பொதுமக்கள் ஆயிரக் கணக்கானோர் திரண்டிருந்தனர்.
அந்த இடத்துக்கு பழனிசாமி வருவதற்கு முன்னதாக, வேங்கடத்தனூர் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவர் 108 ஆம்புலன்ஸுக்கு தொலைபேசியில் அழைத்து, கூட்டத்துக்கு வந்த அதிமுக தொண்டர் வேங்கடத்தனூரைச் சேர்ந்த நீலகரையார் என்பவர் எம்.எஸ்.கே.மஹால் அருகே மயங்கி விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, துறையூர் கனரா வங்கி காலனியைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில், கலிங்கமுடையான்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் ஹேமலதா (8 மாதகர்ப்பிணி) ஆகியோர் நோயா ளியை மீட்பதற்காக 108 ஆம்புலன்ஸில் எம்.எஸ்.கே.மஹால் நோக்கி சென்றுள்ளனர். அப்போது, அங்கு சாலையில் திரண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் 108 ஆம்புலன்ஸை வழி மறித்து, ஓட்டுநர் மற்றும் உதவியாளரை தாக்கி உள்ளனர்.
மேலும் ஆம்புலன்ஸின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர் செந்தில், உதவியாளர் ஹேமலதா இருவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளனர்.
இதுதொடர்பாக, இருவரும் அளித்த புகாரின்பேரில் துறையூர் போலீஸார், துறையூர் நகராட்சி கவுன்சிலரும், அதிமுக நகரச் செயலாளருமான அமைதி பாலு (என்ற) பாலமுருகவேல்(54), அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் பொன் காமராஜ்(59), அதிமுக இளைஞரணி நகரச் செயலாளர் விக்கி (என்ற) விவேக்(32), 21-வது வார்டு கவுன் சிலர் தீனதயாளன்(33) உட்பட 14 பேர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு சொத்தை சேதப்படுத்தியது, உயிர் காக்கும் வாகனத்தை வழி மறித்தது உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
காழ்ப்புணர்ச்சி ஏன்? - இதற்கிடையே, சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் நேற்று கூறியதாவது: திருச்சி துறையூரில் பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி, ஓட்டுநரை அதிமுக தொண்டர்கள் தாக்கி உள்ளனர். பழனிசாமியின் பிரச்சார கூட்டத்தில் தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்ததால் தான் அங்கு ஆம்புலன்ஸ் சென்றுள்ளது.
அவருக்கு வலிப்போ, இதய பாதிப்போ, ரத்த குழாய் வெடிப்போ ஏற்பட்டி
ருந்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தும் பழனிசாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவது என்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கூறினார்.
10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வரும் இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவன அதிகாரிகள் கூறும்போது,“சுகாதாரத்துறை சார்ந்த நபர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினால், வன்முறை தடுப்பு மற்றும் உடமை சேதார தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சட்டத்தின்படி, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். சேதாரங்களுக்கான தொகையும் அபராதமாக செலுத்த நேரிடும்” என்றனர்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “108 ஆம்புலன்ஸுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து விட்டார். விரைவாக வாருங்கள், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என ஒருவர் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் அங்கு சென்றபோது அதிமுக தொண்டர்கள், ஓட்டுநரையும், மருத்துவ உதவியாளரையும் தாக்கினர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (இன்று) நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபடுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.