

சென்னை: விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 26 வயதான இளம்பெண் ஒருவர் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 19-ம் தேதி விடுதியின் அறை கதவைத் திறந்து வைத்து அந்த இளம்பெண் உறங்கியுள்ளார். அப்போது அதிகாலை நேரத்தில் விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர், தூங்கிக் கொண்டிருந்த அந்தபெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தூக்கத்திலிருந்து விழித்த பெண் அதிர்ச்சியில் சத்தம்போட்டார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து வேளச்சேரி போலீஸில் இளம்பெண் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், இச்சம்பவத்தில் ஈடுபட்டது புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்(25) என்பதும், இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கிளினீங் வேலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.