

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள ஆரைகுளம் கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் 2 பேர் உயிருக்குப் போராடுவதாகவும், வீட்டுக்கு வெளியே ஒருவர் பலத்த தீக்காயத்துடன் இருப்பதாகவும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பலத்த காயங்களுடன் இருந்த 3 பேரையும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த சகாரியா (65) என்பவர், தனது மனைவி மெர்சி (58), மகன் ஹார்லி பினோ (27) ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து வீட்டை பூட்டிவிட்டு, வெளியே வந்து தனது உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டது தெரியவந்தது.
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மெர்சி, ஹார்லி பினோ ஆகியோர் உயிரிழந்தனர். சகாரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சகாரியாவுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களிடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. மூத்த மகனுக்கு சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், திருமணத்துக்கு சகாரியாவை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மூத்த மகன் தனது மனைவியுடன் நேற்று கன்னியாகுமரி சென்றிருந்தார். அப்போது வீட்டில் தகராறு ஏற்பட்டு, சகாரியா தனது மனைவி, 2-வது மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, தனது உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.