

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக மாணவிகள் பேசிய ஆடியோ வெளியான நிலையில் பள்ளியில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசி மாணவி ஒருவர் ஆடியோ வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாணவி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருவதாகவும், இப்பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நடனப் பயிற்சி மேற்கொள்ளும் போது மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், ஏழாம் வகுப்பு முதல் அந்த பள்ளியில் படித்து வருகிறேன். இது போன்று நடக்கும் என சீனியர் மாணவிகள் கூறினார்கள், நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இது மாதிரி நடக்கும் போது அச்சமாக உள்ளது.
ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடும் செயலை யாரிடமும் போய் சொல்ல முடியாத நிலையில் உள்ளோம். இந்த பிரச்சினையில் இருந்து மாணவிகளை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த ஆடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ
ரசு பள்ளியில் ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக மாணவி ஒருவர் பேசி வெளியிட்டுள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதையடுத்து கிணத்துக்கடவு போலீஸார் மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.